Monday, August 21, 2017

வயதின் தீராத வாசங்கள் !




சின்னச் சின்ன போட்டிகள்
சிலேட்டு கிறுக்கல்கள் போல
இன்னும் இருக்கிறது ! 

மெல்ல மெல்ல வயது
மனதை வெளுத்த போது 
கரைந்து போனது ஆயிரம் !

சொல்லச் சொல்ல ஆயிரம் 
வாழ்வியல் சம்பவங்கள் 
நாம் பேசும் போது அழுத்துப் போவதில்லை !

வெல்ல வெல்லத் தீராத
வாழ்வியல் போட்டிகள் 
நாம் கலந்து பேசிய போது கரைந்து போனது !

இல்லை இல்லை இனிமேல் 
வேறெங்கும் சுவர்கம் என்பது  நட்பில் 
தோய்ந்து கிடப்பதை விட  !


Monday, September 26, 2016

எனக்குள் இருக்கும் பெண்மையைச் சந்தித்தேன்.

இதயம் சரியாக இருந்தால்  
”நேர்” “எதிர்” வாதங்களை மறந்து விடுவோம் .

ஷீவாங் ட்சூ Chuang Tzu (369 - 268 B.C.) 


இரவும் பகலும்
சந்திக்கும் வேளையில் ,

முப்பத்தி மூன்று ஆண்டு ,
என் இளமைப் பிரளயத்தால்
எங்கோவெல்லாம் தேடிய
அந்தப் பெண் முகம் பார்த்தேன் .

ஏறக்குறைய என்னைப்போலவே
இருந்தாள் அவள்.

பௌர்ணமி நாளின் சந்திரன் போல
அவளைப் பார்த்தக் கணத்தில்
என் ஆண்மை சிலிர்த்தது.

இருவரும் பேசவில்லை
வெகு நேரம் உற்றுப் பார்த்திருந்தோம்...
மெல்லிய சிரிப்பைக்கூட
உதிர்க்கவில்லை ...

இத்தனை நாள் தேடிய
 என் இன்னொரு பாகத்தை
இங்கே பார்க்கிறேன் என்று
எதுவோ ஒன்று உள்ளுக்குள் உளறியது .


பெண்ணின் மேலிருந்த ஆதிக்க வெறி ,
அடைய நினைக்கும் காதலின் பாசாங்கு,
ஆசை வார்த்தை பேசும்
காமத்தின் சூழ்ச்சி ,

உடல் மேலிருந்த ஈர்ப்பு,
உறுப்புகள் மேலிருந்த ஆசை,
போர்த்தியிருக்கும் உடை மேலிருக்கும்
விமர்சன வேகம் - எல்லாம்

ஓய்ந்து போன
கோடை மழையின்
சிறு வெள்ளம் போல
ஓடி மறைந்தது அப்போது அவள் முன் !

பேச்சு என்று வந்தால்
ஆண்தானே ஆரம்பிக்க வேண்டும் ?

உன்னை எத்தனை காலம்
வெளியே தேடுவது ?

இப்போது அவள் சிரித்து விட்டு,
உள்ளே இருப்பதைத் தொலைத்து விட்டு
வெளியே தேடுவதனால்
தொலைத்தவன்தானே தேட வேண்டும் ? .

எனக்கு ஏனோ
கோவிக்க எதுவுமில்லை .

என்னையறிமால் அப்போது
நானும் சிரித்து விட்டு
தொலைந்தவள் என் முன்
வந்து நின்றால் என்ன ?

நீ தேடிய எல்லா
பெண் முகத்திலும் நானில்லை
என்று தெரிந்தும் தனியன் என்றெண்ணி
ஓயாமல் தேடிக்கொண்டு இருந்தாய்

இத்தனை நாள் நான் காத்து இருந்த
இந்த ஒற்றைப்பதையில்
இன்றுதான் என் எதிரே வந்தாய்
என்று சொல்லி  மீண்டும் சிரித்தாள்

நானும் அவளுடன் சேர்ந்து சிரித்தேன்
அங்கு நாங்கள் இருவரும் சிரித்தாலும்
 ஒரு ஓசைதான் வந்தது
அது பெண்ணையும் ஆணையும்

ஓசைகளால் பிரிக்காத சிரிப்பு
ஒரு உயிரின் இரு பாகத்தின் ஒரே குரலில் !

இரவும் பகலும் அங்கு கலந்திருந்தது.
ஆணும் பெண்ணும் அங்கு ஒரு முகமாய் தெரிந்தார்கள்  .



”பாதைகள் சரியாக இருந்தால் ” என்ற ஓஷோவின் பார்வையில் “ஷீவாங் ட்சூ” சிந்தனைகளை வாசிக்கும் போது ஆணுக்குள் இருக்கும் பெண்மையையோ பெண்ணுக்குள் இருக்கும் ஆணையோ சந்தித்தால் பிளவு பட்ட மனிதன் ஒன்றாக மாறுவான் அப்போது அவனுக்குள் பிறக்கும் ஒருமையின் விளைவு தான் உண்மைக் காதல். மற்றெல்லாம் காமத்தேவையின் சூழ்ச்சி என்று சொல்லியிருந்தார் .அந்த பாதிப்பின் விளைவால் “ எனக்குள் இருக்கும்  இருக்கும் பெண்மை” சந்திப்பே இது   


Monday, September 12, 2016

பிரம்மகிரியின் புதல்வி .



பாவத்தை தொலைக்க 
நதிக்கு போகிறோம் 
இங்கே ஒரு நதியே 
பாவியாக்கப் படுகிறது !

கடந்து வரும் பாதை 
கர்நாடகம் என்பது தவறா ?

பெண் பெயர் வைத்ததால்
பொத்தி வைத்துக் கொள்ள
பொன்னி நதி புஷ்பம் அல்ல
புயலின் மிச்சம் அவள்!

அணைக்குள் கட்டிப்போடுவதால்
அவள் அடங்கிப் போகும்
பேரிளம் பெண்ணல்ல
பிரம்மகிரியின் புதல்வி.

எத்தனை நாள் மௌனம் காப்பாள் ?

 பதில் சொல்ல காத்து இருக்கிறாள்
பருவ மழை மூலம்...

Monday, June 6, 2016

இந்தப் பூமி கடவுளுடையது !





இன்னும் எத்தனை 
விதவைகள் வேண்டும் 
உங்கள் ஆணவத் தீயின் 
நாவுகளுகளின் பசிக்கு ? 

உலகம் கடவுள் தந்தது என 
உரக்கச் சொல்லி ஒப்பாரி செய்து விட்டு 
என்னுடையது தேசம் இதுவெனெ 
ஏன் கடவுளின் கழுத்தை நெறிக்கிறீகள் ?

வாழச் சொல்லி வாய்ப்புத் தந்த பூமியை 
கல்லறைகளின் தேசங்களாக்கச் சொன்னது 
எந்தக் கடவுளின் வேண்டுதல்? 

வீட்டுக்குள் கோடு போட்டீர்கள் 
அப்புறம் வீதிக்கு ,நாட்டுக்கு 
போட்டக் கோடுகள் அத்தனையும் 
ரத்தச் சாட்சியங்களாய் நிற்கிறது !

வாழக்கை அழகானது 
வாழும் வாய்ப்பு ஒரு தரமே 
இதில் என் தேசம் உன் தேசம் 
எதுவுமில்லை  தனியே ! 

என் தேசத்து மலர் 
அங்கும் வளர்கிறது 
உன் தேசத்து நோய்களுக்கு 
இங்கு மருந்து விளைகிறது . 

கடவுள் நம்மைப் பிரிக்கவில்லை 
முன்னர்ப் போட்டக் கணக்கின் பிசகு 
தாத்தன் தோண்டிய கிணறு 
உப்பென்றால் நீ வேண்டுமானால் குடி ! 

அறிவே தெய்வமென்ற 
அடுத்தத் தலைமுறைக்காவது 
இந்தப் பூமி கடவுளுடையது 
என்று சொல்லிக் கொடு .

Friday, May 20, 2016

வீரம் என்பது பயத்தின் வேசம் !



Terri Gurrola is reunited with her daughter after serving in Iraq for 7 months.


மனிதனுக்குள் மனிதன் 
பிறப்பின் மகத்துவம் புரியாமல் 
போருக்கு வீரம் எனப் பெயரிட்டு 
போட்டிப் போட்டுச் சாய்கிறீர்கள் 

என்ன செய்தது உங்கள் வெற்றி ? 
கழுவும் கையில் தின்றீர்கள் 
கனவில் உறவு கொண்டீர்கள் 
கைப் பிடித்து நடந்தீர்கள் ! 

எது வீரம் ? எது கோழைத்தனம் ? 
ஒரு புயல் ? ஒரு சீற்றம் ? 
ஒன்றாவது ஜெயிக்க முடியுமா 
உங்கள் வீரத்தால் ? 

மனிதன் மண் பொம்மை 
இயற்கையின் மடியில் இருக்கும் வரை ! 
தரைக்கு வந்தால் நிற்க முடியாத 
தவிடு பொடிதான் நீ சொல்லும் வீரம். 

எதிரிகள் யாருமில்லா உலகம் 
எங்கும் இருக்கிறது - அதை உன் 
உள்ளங்கைக்குள் அடக்காதே 
உள்ளத்துக்குள் அடக்கு அது வசப்படும்.

வீரம் என்பது பயத்தின் வேசம் 
மிருகத்தனத்தின் எச்சம்
எழுந்து நிறக்க நினைக்கும் 
 இந்த உலகத்தில் மனதின் ஒரே எதிரி !

Thursday, April 7, 2016

நல்ல சமாரியன் (The Good Samaritan)




தூரிகைகள் காட்டும் 
நொடிப்பொழுதுக் காட்சியில் 
எத்தனை எத்தனை
உள் மன வெளிப்பாடு 
உயிரைப் பிய்த்து 
மனதின் காட்சியாய் 
மிரள வைக்கிறது ?


குற்றுயிராய் சுமக்கப்படும் 
இந்த மனிதன் யார் ?
அந்த முகம் ...அந்த முகம் ...
இந்தப் பிரபஞ்சத்தின் 
வெளிச்சக் கீற்றுக்களின் 
வேர்களுக்கு நீருற்றுக்கிறது !


கைகளில் ஆணித்துளை
நெற்றியில் முள் முடித்தடம் ,
இவர் மீண்டும் உயிர்தெழுந்த ..
மீட்டு வரப்படும் பேராத்மாவா ?


வரைந்தவன் இங்கு தெரியவில்லை 
வரைந்தது  சொல்ல அழைக்கிறது, 
வானுலகின் மைந்தன் 
வந்து விட்டானென்று ! 



Monday, February 15, 2016

காதலின் கருணை மனு




உன் விவாகரத்து மனு 
கருணையற்றச் சட்டத்தின் முன் 
கைகட்டி நிற்கிறது .

யோசித்துப்பார்ச் சகியே ,

சட்டத்தைக் கேட்டாக் காதலித்தோம் 
கறுப்புக் கோட்டும் 
நீதி மன்ற வளாகமும் 
நம் காதல் சட்டத்தின் முன் 
இலைச் சருகாய்க் கூச்சலிடுகின்றன , 

போதும் பெண்ணே 
பிரிவின் வலிகள் !

மீண்டும் வசந்தம் 
நம் வாழ்வில் துளிர்க்க  வேண்டும் 

காலங்கள் நடத்திய பாடம் போதும் 
நமக்குள் சில மூடிகிடக்கும்
 கதவுகளைத் திறப்போம் !

அதற்குள் ... 
நாம் வெய்யிலில் 
விடைப் பெறும் பனித்துளியாய் 
நம் முரண்களைத் துறக்க வேண்டும் .

காதல் தோணியில் 
அன்புத் துடுப்புதான் 
நம்மைக் கரைச் சேர்த்தது 

ஏதோ ஓர் அலையின் வருகையில் 
துடுப்பை மறந்தோம் 
எங்குப் போகிறோம் என்பது 
இருவருக்கும் தெரியவில்லை .

ஒரு தோணி 
இரு திசையில் பயணம் 
வெகு தூரம் வந்து விட்டோம் !
கரைகள் தென்படவில்லை 
இறுகிப்போன கோபமும் 
எதையும் அடையவில்லை !

எட்டும் தூரத்தில் இருக்கும் 
உன்னிடம் பேச எதுமில்லாமல் 
உப்புக்காற்றின் உறவில் 
எனக்குப் புழுக்கம் தாங்கவில்லை. 

வா மீண்டும் காதலிப்போம் 
வசந்தம் நம் வாசல் கதவைத் தட்ட 
பிடிவாதச் சிறைக்குள்ளிருந்து 
வேளியே வருவோம்... 

இலை எதிர்காலம் 
எதிரே தெரிகிறது ...
இது என் காதலின் கருணை மனு !

Tuesday, February 9, 2016

எழுதாத பக்கங்கள் !



தூசு தட்டிப் பார்த்து 
பழைய நாட்குறிப்பின் 
எழுதப்படாத பக்கங்களை 
புரட்டிய பையன் கேட்டான் 

எழுது கோளை 
தொலைத்து விட்டீர்களா? 

ஆமாம் . 
பொய்யுரைத்தேன் . 

பென்சிலும் தொலந்து விட்டதா? 
மறுபடியும் கேள்வி முளைத்தது 

இருந்தது. 
ஆனால் எழுதவில்லை . 

மறுபடி அவன் கேட்பதற்குள் 
நானே சொன்னேன் 

தலையெழுத்தை 
புரிந்து கொள்ளாத காலம் அது 
என்றேன் . 

புரியவில்லை அப்பா .
 
இது போல 
உன் குழந்தையும் கேட்க்கும் 
அப்போது உனக்கு புரியும் என்றேன் . 

அவன் நாட்குறிப்பை மூடிவைத்தான். 

நான் அன்று எழுதாத 
பக்கங்களின் நினைவுகளில் 
புதைந்து போனேன் ...

Thursday, December 31, 2015

அதே மனம் !



நாளை புது வருடநாள் 
எல்லோரும் வாழ்த்துவார்கள் 
நானும் கூட ...

இனிப்புகள் இடம்மாறும் 
இதயங்கள் பரிசலிக்கும் 

தினமும் தேய்ந்த
 நாட்காட்டிகள்   விடைபெறும் 
நாட்குறிப்பு பழசாகும்  

புதிதாய் தீர்மானங்கள் பிறக்கும் 
பழையது சலிக்கும்.

கோவில் கடவுள்கள் 
கண்டுகொள்ளப்படுவார்கள் 

ஆடைகளும் 
ஆசைகளும் மாறிப்போகும் 

நாளை இரவு 
எல்லாம் மாறிவிட்டது 
என்பதாய் எண்ணம் சொல்லும் 

எப்போது என்று 
இந்த வருடமும் 
அதே மனம் கேட்கும்  !

Sunday, September 20, 2015

நீரில் தொலைந்த நிலவு !





அக்னி சிறகுகள் சொன்ன 
அற்புதக் கனவை 
புரிந்து கொள்ளாத மனது ,

ஆழ் மனதின் நிறைவேறாத
ஆசைச் சிந்தனைகள்தான் கனவென்று 
சிக்மண்ட் ஃப்ராய்டு படித்தும் 
புரியாத சிந்தனை,  

உறங்கும் போது பிரசவிக்கும் 
எண்ணங்களின் கசிவே 
கனவு என ஆன்மீகம் சொல்லியும் 
புரியாத அறிவு, 

என்னை பிரிந்த உன்னை,
எங்கிருந்தாலும் வாழ்க எனும்
என் ஆழ்மனம் வாழ்த்தும் போதுதான்
அதன் அர்த்தம் முழுதாய்  புரிந்தது .

கனவென்பது உடல் உறங்கும் போதும் 
விழித்து இருக்கும் ஆழ் மனம் விரும்பும்
அழுத்தமான கொள்கை என்பதாக !

என்ன செய்ய ?
ஜென் சொல்வது போல
ஞானம், சில பேருக்கு 
போதி மரத்தடியில்,  
பல பேருக்கு 
நீரில் தொலைந்த நிலவில் !

Monday, September 14, 2015

காதல் விதவை
















தொலைந்துப் போன குழந்தைக்கு 
தாய்க் குரல் போல 

இத்தனை வருடங்கள் 
நம் நினைவுகளைக் காலம் 
கழுவிக் காய வைத்தும் 

பாடம் சொல்லிதரும் போது 
மகளின் பேச்சில் 
அவன் வகுப்புத் தோழனின் பெயர் 
உன் பெயராக இருந்த போது 

என்னை மீறிய 
என் சிலிர்ப்புகளை 
தவற விட்ட 
மகளின் பாடப்புத்தகம் 
காட்டிக் கொடுத்தது 

தடுமாறிய என் செயலை 
மகள் கவனித்தாலும் 
வாழ்க்கை என்பது 
பணத்தின் கோட்டை அல்ல 
அது வெறும் வாசற்படிதான் 
என்று என் வாழ்க்கை 
பாடத்தில் தோற்றுபோனதை 
எப்படிப் புரிய வைக்க முடியும் ? 

காதல் என்பது 
அன்பு மட்டுமே 
என்பதைக் காலம் புரிய வைக்கும் போது 
வாலிபம் என்பது 
மேற்குச் சூரியனாய் 
கரைந்துப் போகிறதே 
என்ன செய்ய ? 

வாழ்க்கையைக் காதலித்தாலும் 
என்னைக் காதலித்த 
காதலை மறுத்த 
நானும் ஒரு காதல் விதவைதான்

Tuesday, June 16, 2015

இன்னும் 23 குரோமோசோம் .




உடலுக்குள்ளா மனசுக்குள்ளா
என பிரித்து சொல்ல முடியவில்லை
ஆனால்
எப்போதும் ஒரு பெண் எனக்குள்
உறங்குகிறாள் ,விழிக்கிறாள்
அன்றாட செயல் புரிகிறாள்

ஆனால் அவள்
என்னோடு எதுவும் பேசுவதில்லை

அவள் சிரிக்கும் நேரமும்
என் தாய் சிரிக்கும் நேரமும்
ஒன்றாக பயனிக்கிறது

அவள் அழும் நேரமும்
என் மனைவி அழும் நேரமும்
ஒன்றாக ஒலிக்கிறது

அவள் சந்தோசமாக
பார்க்கும் நேரமெல்லாம்
நான் விழித்தெழும் போதுதான்

முறைத்துப் பார்க்கும் நேரமெல்லாம்
நான் தூங்க போகும்
நேரமாக மட்டுமே இருக்கிறது .

எப்போது அவள்
என்னை விட்டு விலகுகிறாள்
எப்போது எனக்குள்
புகுந்து வசிக்கிறாள்
எனபது மட்டும்
ஏனோ தெரியவில்லை !


Wednesday, May 13, 2015

காந்தி சிரிக்கிறார் ...





மழைப் பெய்தப் பிறகுதான் 
தெரிகிறது - சாலைகளின் பூர்வீகம் !

சாலையைப் போட 
கையூட்டுப் பெற்றுக் கொண்டு 
ஒப்பந்தம் கை நாட்டுப் போட்ட 
அந்த அரசியல் வாதியின் 
வஞ்சகச் சிரிப்பின் பல் வரிசையை 
எத்தி நிற்கும் கற்கள் சொல்கிறது !


வரிகள் கொடுத்தே 
கை ரேகை வரிகளை 
தொலைத்த என் - இந்திய 
தோழனின் வயிற்றுக் குழிகளை 
அந்தப் பள்ளங்கள் சொல்கின்றன !

அழுது அழுது என்ன பண்ண ? 
இலவசங்களில் நம்பும் 
நம் எதிர்காலங்களைப் பார்த்து 
பூமித்தாயின் கண்ணீர் , 
தேங்கி நிற்கும் - சாலைக் 
குட்டைகளில் தெரிகிறது !

கொண்டு போவதை 
மனைவி கையில் 
கொடுக்கும் முன்னே 
பஞ்சராகிப் பாடையில் போன 
டயரின் வாழ்வில் தெரிகிறது 
உழைப்பின் பயன் ! 

வாங்கிக் கொடுத்த 
சுதந்திரம் நம் அன்னலின் 
வயதான முதுகெழும்பு போல 
வளைந்து நிற்பது கண்டு 
ரூபா நோட்டு - கைத்தடியும் 
கண்ணாடியும்
 சிரிக்கிறது !

Saturday, November 29, 2014

சில படகுகள் நீரில் மிதக்கவில்லை .



கடலில் இருந்து
நினைவுகளின் ஆழத்தில்
வெகு தூரம்
பின்னோக்கி நகர்ந்து
நாம்  நதியாய்
பயணித்தால் ...

ஞாபகப்  பாறைகளில்
நினைவு அலைகள்
முட்டி மோதி
நுரை மனதாய்
ஒரு கணம் நின்றால்  ..


அவை அழகிய
நிலாக் காலங்கள் !

முதல் நாள்
பள்ளிக் கூட
ஸ்லேட்டு , பை
புது வாசனைகள் தொடங்கி ..
எத்தனை எத்தனை 
அநுபவப் பூக்கள்   ? 


அது ஒரு 
மழைக் காலம் 

பார்க்கும் பெண்ணெல்லாம் 
அழகிய கேள்விகளாய்
மனசுக்குள் பிராண்டும்  
வயதின் குடைக் காளான்கள்
எத்தனை  எத்தனை ?


அது ஒரு 
கனா காலம் 

தேடிய வேலைகள் 
உதறித் தள்ளியபோது 
பசித்த புலியாய் 
பூமியில் வலம் வந்த 
வலிக்கும் கனவுகளை 
சுமந்த காலம் !


அது ஒரு 
வசந்த காலம் 

இவளா இவளேதானா 
என் மனைவி ?
என்ற  பிரபஞ்ச சிலிர்ப்பில் 
கல்யாண வாழ்வில் 
கரைந்து போன போது 
வாசல் பூக்கள் 
வரவேற்ப்பில் மகிழ்ந்த காலம்  !


அது ஒரு 
தேடல் காலம்

படிக்க வேண்டிய 
புத்தகங்கள் - தேட 
வேண்டிய திசைகள் 
ஆயுளைக் கூட்டி கொள்ள 
மனு செய்த 
அப்பாவி மனசின் காலமது  !



இது ஒரு 
நினைவுக் காலம் 

வெகுதூரம் கடந்து 
விடியாத இரவுகளாய்
கொடுத்த வாக்குகளை 
நிறைவேற்ற  இனிய 
நினைவுகளோடு 
 மிதக்கும் காலமிது !