Wednesday, May 13, 2015

காந்தி சிரிக்கிறார் ...





மழைப் பெய்தப் பிறகுதான் 
தெரிகிறது - சாலைகளின் பூர்வீகம் !

சாலையைப் போட 
கையூட்டுப் பெற்றுக் கொண்டு 
ஒப்பந்தம் கை நாட்டுப் போட்ட 
அந்த அரசியல் வாதியின் 
வஞ்சகச் சிரிப்பின் பல் வரிசையை 
எத்தி நிற்கும் கற்கள் சொல்கிறது !


வரிகள் கொடுத்தே 
கை ரேகை வரிகளை 
தொலைத்த என் - இந்திய 
தோழனின் வயிற்றுக் குழிகளை 
அந்தப் பள்ளங்கள் சொல்கின்றன !

அழுது அழுது என்ன பண்ண ? 
இலவசங்களில் நம்பும் 
நம் எதிர்காலங்களைப் பார்த்து 
பூமித்தாயின் கண்ணீர் , 
தேங்கி நிற்கும் - சாலைக் 
குட்டைகளில் தெரிகிறது !

கொண்டு போவதை 
மனைவி கையில் 
கொடுக்கும் முன்னே 
பஞ்சராகிப் பாடையில் போன 
டயரின் வாழ்வில் தெரிகிறது 
உழைப்பின் பயன் ! 

வாங்கிக் கொடுத்த 
சுதந்திரம் நம் அன்னலின் 
வயதான முதுகெழும்பு போல 
வளைந்து நிற்பது கண்டு 
ரூபா நோட்டு - கைத்தடியும் 
கண்ணாடியும்
 சிரிக்கிறது !

2 comments:

  1. வணக்கம்
    அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete