கடலில் இருந்து
நினைவுகளின் ஆழத்தில்
வெகு தூரம்
பின்னோக்கி நகர்ந்து
நாம் நதியாய்
பயணித்தால் ...
ஞாபகப் பாறைகளில்
நினைவு அலைகள்
முட்டி மோதி
நுரை மனதாய்
ஒரு கணம் நின்றால் ..
அவை அழகிய
நிலாக் காலங்கள் !
முதல் நாள்
பள்ளிக் கூட
ஸ்லேட்டு , பை
புது வாசனைகள் தொடங்கி ..
எத்தனை எத்தனை
அநுபவப் பூக்கள் ?
அது ஒரு
மழைக் காலம்
பார்க்கும் பெண்ணெல்லாம்
அழகிய கேள்விகளாய்
மனசுக்குள் பிராண்டும்
வயதின் குடைக் காளான்கள்
எத்தனை எத்தனை ?
அது ஒரு
கனா காலம்
தேடிய வேலைகள்
உதறித் தள்ளியபோது
பசித்த புலியாய்
பூமியில் வலம் வந்த
வலிக்கும் கனவுகளை
சுமந்த காலம் !
அது ஒரு
வசந்த காலம்
இவளா இவளேதானா
என் மனைவி ?
என்ற பிரபஞ்ச சிலிர்ப்பில்
கல்யாண வாழ்வில்
கரைந்து போன போது
வாசல் பூக்கள்
வரவேற்ப்பில் மகிழ்ந்த காலம் !
அது ஒரு
தேடல் காலம்
படிக்க வேண்டிய
புத்தகங்கள் - தேட
வேண்டிய திசைகள்
ஆயுளைக் கூட்டி கொள்ள
மனு செய்த
அப்பாவி மனசின் காலமது !
இது ஒரு
நினைவுக் காலம்
வெகுதூரம் கடந்து
விடியாத இரவுகளாய்
கொடுத்த வாக்குகளை
நிறைவேற்ற இனிய
நினைவுகளோடு
மிதக்கும் காலமிது !
No comments:
Post a Comment