Saturday, September 2, 2017

மழைக்காதல் !





வெகு நாளாகி விட்டது 
என் மனசுக்குள் வாழும் 
காதலோடு பேசி... 

இன்று போல அன்றொரு மழைக்காலம் 
எதிர்பாராத காலத்தின் சோதனையில் 
ஒழுகும் கூரைக்குள் வெகு அருகே நாங்கள் . 

இதற்கு முன் நாங்கள் பார்த்துக்கொண்டதே இல்லை 
ஆனால் இப்போதோ இது ஏழாவது ஜென்மத் தொடர்பாய் 
அந்த மழைப் பொழுது செம்புலப் பெயலாக்கி விட்டது. 

இருவரின் உடலும் 
வயதுக்கு வந்து வெகுநாளாகியிருந்தது 
ஆனால் மனது விரல் சூப்பிக்கொண்டுதான் இருந்தது. 

காரணமே இல்லாமல் விழிகள் நான்கும் 
தூரத்தில் தொலைந்து தொலைந்து மீண்டது 
திசையறியாத குழந்தையைப் போல 

சின்னதாய் ஒழுகும் கூரைக்குள் இருந்தாலும் 
எங்கள் பார்வையாலே முழுவதுமாக 
நனைத்துக் கொண்டுதான் இருந்தோம். 

மலை நேரத்து விருந்தாளி போல மழை 
எப்போது போகும் என்று தெரியாவிட்டாலும் 
நாங்கள் நிரந்தரச் சொந்தாமாகிக் கொண்டு இருந்தோம் 

இடியும் மின்னலும் பூமியையும் வானத்தையும் 
கிழித்துப் போட்டுப் பயத்தை 
கிளறிக்கொண்டு இருந்தது 

இருண்டு கொண்டு இருக்கும் அந்த இடத்தில் 
மின்னல், கம்பிமத்தாப்பைக் கொளுத்திப் போட்டு 
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள உதவிக்கொண்டு இருந்தது 

எவ்வளவு நேரம் நாங்கள் பார்த்திருந்தோம் காலம்தான் அறியும் 
அந்த மழை நேரத்து இடியாய் அவள் எங்குப் போய்ச் சேர்ந்தாளென்று
இன்று வரை தெரியாது ! 

4 comments:

  1. கவிதை நன்று. பாராட்டுகள்.

    மலை நேரத்து - மாலை நேரத்து...
    சொந்தாமாகிக்கொண்டு - சொந்தமாகிக்கொண்டு

    எழுத்துப் பிழைகளை சரிபார்த்து வெளியிடலாமே....

    தொடர்ந்து பதிவிட வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. காதலித்துப்பார் உன்னை சுற்றி ஒளி வட்டம் தோன்றும் உண்மைதானோ ?

    ReplyDelete